திருநெல்வேலி மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில். பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை என்ற இடத்திலிருந்து இப்பகுதிக்கு தினமும் பால் விற்று வருவாராம். தினமும் அவர் உவரி வழியாகத் தான் செல்வாராம். தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விடுவாராம். இதற்கு என்ன காரணம் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்று யோசித்தபின்னர், அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுக்குவதால்தான் கால் இடறுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.
அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம்.
இறைவனுடைய ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டினார்களாம். நாளடைவில் அந்த கோயில் பெரிய அளவில் உருப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின் கருவறையில் சுயம்புலிங்கசுவாமியாக அருள்பாலிக்கின்றார் இறைவன்!
