இரணியகசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.
மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக நம்பிக்கை.
கருவறை
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
அஷ்டாங்க விமானம்
ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.
மகாமக கிணறு
புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணற்றை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.
ராமானுஜருக்கு உபதேசம்
திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். அந்த மந்திரத்தை உபதேசித்துவிட்டு இதை மாற்று சாதியினருக்கு சொல்லக்கூடாது என்றும் அவர் கட்டளையிட்டார். ஏன் என்று ராமானுஜர் கேட்ட பொழுது இதைச் சொன்னால் கேட்பவர் வைகுண்டம் செல்வர், சொல்லும் நீ நரகம் செல்வாய் என்றார். அதைப் பொருட்படுத்தாத ராமானுஜர் திருக்கோஷ்ட்டியூர் மதில் மீது ஏறி நின்று அனைத்து சாதி மக்களையும் அழைத்து "நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கவிருக்கிறேன்" என்றுச் சொல்லி ஓம் நமோ நாராயணாய என்று உபதேசித்தருளினார். அப்போது அவரது குரு ஏன் இதை செய்தாய் என்றுக் கேட்ட பொழுது இராமானுஜர் "இதைக் கேட்டு இவர்கள் எல்லாரும் நாராயணன் திருவடிகளை அடைவாராயின் இவர்கள் பொருட்டு நான் நரகம் செல்லத் தயார்" என்றுச் சொன்னார். இச்சிறப்பான நிகழ்வு நடந்தது இத்தலத்தில் தான்.
மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.